

சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார் பிரபுதேவா.
சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ் கான், சோனு சூத், டிம்பிள் கபாடியா, வினோத் கண்ணா, மலைக்கா அரோரா நடிப்பில் 2010ஆம் ஆண்டு ரிலீஸான பாலிவுட் படம் ‘தபாங்’. அபிநவ் காஷ்யப் இயக்கிய இந்தப் படத்தை, அர்பாஸ் கான் மற்றும் மலைக்கா அரோரா இணைந்து தயாரித்தனர். ஆக்ஷன் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு, வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.
எனவே, ‘தபாங்’ படத்தின் இரண்டாம் பாகத்தை 2012ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தனர். தயாரிப்பாளரான அர்பாஸ் கான், படத்தை இயக்கவும் செய்தார். இந்தப் படத்தில் பழைய கூட்டணியோடு பிரகாஷ் ராஜும் நடித்தார். ஆக்ஷனோடு சேர்த்து காமெடிப் படமாகவும் இதை இயக்கினார் அர்பாஸ் கான். 80 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 328 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க இருக்கின்றனர். அர்பாஸ் கான் தயாரிக்க, சல்மான் கான் – சோனாக்ஷி சின்ஹா கூட்டணி தொடர்கிறது. படத்தை இயக்கப்போவது, நம்மூர் பிரபுதேவா. அடுத்த வருடம்தான் இந்தப் படம் தொடங்கும் என்கிறார்கள். விரைவில் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபுதேவா கடைசியாக இயக்கிய படம் ‘சிங் இஸ் பிளிங்’. 2015ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு 4 வருட இடைவெளிக்குப் பிறகு ‘தபாங் 3’ படத்தை இயக்கப் போகிறார் பிரபுதேவா. ‘மெர்குரி’, ‘லக்ஷ்மி’, ‘யங் மங் சங்’ என அவர் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. ‘ஊமை விழிகள்’, ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ‘காமோஷி’ என்ற ஹிந்திப் படத்திலும் தற்போது நடித்து வருகிறார் பிரபுதேவா.