உங்களை பெருமையடையச் செய்வேன்: ஸ்ரீதேவி குறித்து மகள் ஜான்வி நெகிழ்ச்சி பதிவு

உங்களை பெருமையடையச் செய்வேன்:  ஸ்ரீதேவி குறித்து மகள் ஜான்வி நெகிழ்ச்சி பதிவு
Updated on
1 min read

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது அம்மாவின் பிரிவு குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். கடந்த 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. குளியலறைத் தொட்டியின் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிப்ரவரி 28 அன்று ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டு ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரண்டு ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது அம்மாவின் பிரிவு குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

''எனது நெஞ்சில் வலிமிகுந்த வெற்றிடம் ஒன்று உள்ளது. எனக்கு தெரியும் நான் அந்த உணர்வுடன்தான் இனி வாழ வேண்டும். இவ்வெற்றிடத்தில் கூட என்னால் உங்கள் அன்பை உணர முடிகிறது. வலி மற்றும் சோகங்களிலிருந்து நீங்கள் என்னை காக்கிறீர்கள். நீங்கள் எங்களின் ஆசிர்வாதம்.

நீங்கள் மிகவும் நல்லவர், மிகவும் தூய்மையானவர், அன்பால் நிறைந்தவர். அதனால்தான் நீங்கள் விரைவாக சென்றுவிட்டீர்கள். இருந்தாலும் நீங்கள் வாழ்ந்த காலம்வரை எங்களுக்கு முழுவதுமாக கிடைத்தீர்கள். நான் உங்களை பெருமையடையச் செய்வேன். ஒவ்வொரு காலையும் உங்களை என்றாவது பெருமையடைய செய்வேன் என்ற நம்பிக்கையில் எழுவேன். நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன் இதே எண்ணத்துடன் ஒவ்வொரு நாளும் எழுவேன்.

நீங்கள் என்னுடன் தான் இருக்கிறீர்கள். என்னால் உணர முடிகிறது. நீங்கள் என்னுள், குஷி மற்றும் அப்பாவுக்குள் இருக்கிறீர்கள். நீங்கள் எங்களை விட்டுச் சென்றது என்னை மேலும் வலுப்படுத்தியுள்ளது. என் எல்லாமாகவும் உங்களை நான் நேசிக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in