

'சிங்கம்', 'சிம்பா' கதாபாத்திரங்களை தான் இயக்கும் 'சூர்யவன்ஷி' படத்திலும் கொண்டு வர இயக்குநர் ரோஹித் ஷெட்டி திட்டமிட்டுள்ளார்.
இந்தியில் வெளியான காவல்துறை அதிகாரியை மையப்படுத்திய படங்களில், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் 'சிங்கம்' மற்றும் 'சிம்பா'. இவ்விரண்டுமே தென்னிந்திய மொழிகளின் ரீமேக் படங்களாகும்.
தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தை, 'சிங்கம்' என்ற பெயரிலே ரோஹித் ஷெட்டி இயக்க, அஜய் தேவ்கன் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்தார். தெலுங்கில் வெளியான 'டெம்பர்' படத்தை 'சிம்பா' என்ற பெயரில் ரோஹித் ஷெட்டி இயக்க, ரன்வீர் சிங் நாயகனாக நடித்தார்.
சிங்கம் கதாபாத்திரம் வளர்ந்த அதே ஊரில்தான் சிம்பா கதாபாத்திரமும் வளர்ந்தது என்று சிம்பாவில் கதையமைக்கப்பட்டிருக்கும். அதேபோல க்ளைமாக்ஸ் காட்சியில், சிங்கம் கதாபாத்திரம் சிம்பாவை வந்து காப்பாற்றுவது போலவும், படத்தின் முடிவில், சிங்கம் கதாபாத்திரம், வீர் சூர்யவன்ஷி என்ற இன்னொரு போலீஸ் அதிகாரியிடம் பேசுவது போலவும் காட்சிகள் இருக்கும்.
அப்போதே அது அடுத்த படத்துக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டது. தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் 'சூர்யவன்ஷி' படத்தை இயக்குநர் ரோஹித் ஷெட்டி தொடங்கிவிட்டார். இப்படத்தை ரோஹித் ஷெட்டி, கரண் ஜோஹர் மற்றும் அக்ஷய் குமார் மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
எப்படி 'சிம்பா' படத்தில் சிங்கம், சூர்யவன்ஷி கதாபாத்திரங்களை ரோஹித் ஷெட்டி கொண்டு வந்தாரோ, அதேபோல் இப்போது 'சூர்யவன்ஷி' படத்துக்கு மெகா திட்டமொன்றை போட்டுள்ளார் . 'சிங்கம்' அஜய் தேவ்கன் மற்றும் 'சிம்பா' ரன்வீர் சிங் இருவரது கதாபாத்திரங்களையும், 'சூர்யவன்ஷி'யில் கொண்டுவர முடிவு செய்துள்ளார்.
நேற்று (மே 6) இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்மூலம் மூவரும் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. ஒரு காட்சியிலா அல்லது மொத்த படத்திலும் இணைந்தே நடிக்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும். இப்படம் 2020-ம் ஆண்டில்தான் வெளியாகவுள்ளது.