ஹ்ரித்திக் ரோஷனுக்கு வசை மழை: ட்விட்டரில் கங்கணா சகோதரி ஆவேசம்

ஹ்ரித்திக் ரோஷனுக்கு வசை மழை: ட்விட்டரில் கங்கணா சகோதரி ஆவேசம்
Updated on
1 min read

ஹ்ரித்திக் ரோஷனின் 'சூப்பர் 30' திரைப்படமும், கங்கணா ரணாவத்தின் 'மெண்டல் ஹை க்யா' படமும் ஜூலை 26 அன்று திரைக்கு வரவுள்ளது.

ஏற்கெனவே கங்கணாவுக்கும் ஹ்ரித்திக் ரோஷனுக்கும் பிரச்சினை ஓடிக்கொண்டிருப்பதால், கங்கணாவின் வலியுறுத்தலால்தான் இந்தத் தேதி இறுதி செய்யப்பட்டதாக சில செய்திகள் வந்தன.

ஆனால், இது முழுக்க முழுக்க வியாபார ரீதியான முடிவு. வேறெந்தக் காரணமும் இல்லை என தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதற்குள் கங்கணாவைத் தாக்கி பல செய்திகள் வர ஆரம்பித்துவிட்டதால், வழக்கம் போல அவரது சகோதரி ரங்கோலி, கங்கணாவுக்காக ஹ்ரித்திக்கை தாக்கிப் பேசியுள்ளார்.

தனது தொடர் ட்வீட்டுகளில் அவர் பேசியதாவது...

"போர்க்களத்தில் உங்களைச் சந்திப்பதை விட உங்கள் முதுகில் குத்தும் ஒருவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?  நீங்கள் எவ்வளவு தூரம் கங்கணாவை ஓரங்கட்ட நினைக்கிறீர்களோ அவ்வளவு வலிமையுடன் அவர் திரும்ப வருவார்.

உங்கள் மலிவான விளம்பர யுத்திகளை நம்புங்கள். கங்கணா ஒரு பேட்டி கொடுத்தால் உங்கள் தரப்பு மொத்தம் வீழ்ந்துவிடும். இது கங்கணாவின் தயாரிப்பு நிறுவனம் அல்ல. படம் எப்போது வெளியாக வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ய முடியாது. ஆனால், நீங்கள் எப்போதும் முட்டாளகவே இருங்கள். உங்களுக்குப் பொது அறிவு கிடையாது. உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

ஏக்தாவிடம் எதுவும் சொல்ல முடியாது என்பதால் கங்கணாவை பலியாக்குவதா? தவறு. தொடர்ந்து என் சகோதரி மீது இப்படியான குற்றச்சாட்டை முன்வைத்தால், ஒரு சொடுக்கில் உங்கள் அதிக கொழுப்பு அனைத்தையும் கங்கணா விரட்டிவிடுவார்" .

இவ்வாறு கங்கணாவின் சகோதரி ரங்கோலி கூறியுள்ளார்.

ரங்கோலி, கங்கணாவின் சக பாலிவுட் நட்சத்திரங்களை வசை பாடுவதும், வம்புக்கிழுப்பதும் இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, அலியா பட், அவரது அம்மா சோனி, அப்பா மஹேஷ் பட், ஷபனா ஆஸ்மி உள்ளிட்டோரை ரங்கோலி தாக்கிப் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in