

நடிகை கியாரா அத்வானியின் புதிய திரைப்படத்தின் தலைப்புக்கு, நடிகை கங்கணா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கியாரா அத்வானி, 'இந்தூ கி ஜவானி' (இந்துவின் இளமை) என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இது டேட்டிங் செயலியால் நடக்கும் குழப்பங்களை வைத்து உருவாகும் நகைச்சுவைத் திரைப்படம் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளதாக கியாரா ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்தத் தலைப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பாலிவுட்டில் சர்ச்சைக்குப் புகழ்பெற்ற ரங்கோலி சாந்தெல்.
" ‘இந்தூ கி ஜவானி’ என எப்படி ஒரு படத்துக்குப் பெயர் வைக்கமுடியும்? ஒரு பக்கம் நாம் பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம், அவர்களைக் காட்சிப் பொருளாக்குகிறோம். இந்தத் தலைப்பை தணிக்கைக்குழு அனுமதித்தால், அது நம் முகத்தில் விழும் அறை.
பெண்களாகிய நாம், அவர்களுக்காகவும் நமக்காகவும் துணிந்து நிற்கவில்லை என்பதை நினைத்து எதிர்காலப் பெண் குழந்தைகள் நம்மைப் பற்றி வெட்கித் தலைகுனிவார்கள். ஆணாதிக்க பாலிவுட் கலைஞர்களே... இப்படியான படங்களை எடுத்துவிட்டு எப்படி உங்கள் மகள்களின் கண்களை உங்களால் பார்க்க முடிகிறது?" என்று கடுமையாக சாடிப் பேசியுள்ளார் ரங்கோலி.