பிரதமர் மோடிக்கு பிரகாஷ் ராஜ் மனைவியின் வேண்டுகோள்
தேர்தல் ஆதாயத்துக்காக பாலிவுட் நட்சத்திரங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிடுமாறு பிரதமர் மோடிக்கு பிரகாஷ் ராஜின் மனைவி போனி வர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை, நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் ஒரு பேட்டி எடுத்தார். அரசியல் சாராத பேட்டி என அது அடையாளப்படுத்தப்பட்டது.
தேர்தல் வேளையில், பிரதமர் மோடியின் பிம்பத்தை உயரே கட்டமைக்கும் விதமாக அந்தப் பேட்டி அமைந்ததாகப் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜின் மனைவி போனி வர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி திரைத்துறையை விட்டு விலகியிருக்குமாறு வேண்டுகிறேன். திரைப் பிரபலங்களைத் தயவுசெய்து தேர்தலுக்காகப் பயன்படுத்த வேண்டாம். நடிகர், நடிகையரின் நிலையும் எனக்குப் புரிகிறது.
அவர்களுக்கு இதில் விருப்பமே இல்லையென்றாலும்கூட, உங்களுக்கு எப்படி அவர்கள் நோ சொல்வார்கள்? ஒருநாள் நீங்கள் பாலிவுட் கான்களில் ஒருவரை வைத்து உங்களை நேர்காணல் செய்யவைத்தாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது. தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்களேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பாஜக ஆட்சியையும், பிரதமர் மோடியையும் தனது ட்விட்டரில் விமர்சித்து வருகிறார். அதுவும் அவரது நண்பரும் முற்போக்குப் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலைக்குப் பின்னர் மிக அதிகமாகவே அவர் பிரதமரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தலில் கர்நாடகாவில் சுயேட்சை வேட்பாளராகவும் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில்தான், பிரகாஷ் ராஜின் மனைவியும் பிரதமரை விமர்சித்துள்ளார்.
