

'லட்சுமி பாம்' என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகிறது 'காஞ்சனா'. இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’. ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இந்தப் படம், 2011-ம் ஆண்டு வெளியானது. ராகவா லாரன்ஸ் ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்திருந்தனர்.
கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, தேவன், மனோபாலா, மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்தே, 2-ம் பாகம், 3-ம் பாகம் என இயக்கி வருகிறார் லாரன்ஸ். மேலும், கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது 'காஞ்சனா'. 'லட்சுமி பாம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்து வருகிறார். கைரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார். சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார்.
'காஞ்சனா 3' படத்தின் ஒளிப்பதிவு செய்த வெற்றி, 'லட்சுமி பாம்' படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார். அதே போல், ராகவா லாரன்ஸ் இயக்கும் முதல் இந்திப் படம் இதுவாகும் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதற்காக படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வெளியான ‘காஞ்சனா 3’ மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.