நடிகர் அவதாரம் எடுக்கும் ராம் கோபால் வர்மா: அமிதாப் பச்சன் வாழ்த்து

நடிகர் அவதாரம் எடுக்கும் ராம் கோபால் வர்மா: அமிதாப் பச்சன் வாழ்த்து
Updated on
1 min read

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா நடிகராக அறிமுகமாகிறார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது படங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் தனது பெயர் எப்போதும் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கும்படி செயல்படுபவர் ராம் கோபால் வர்மா. சர்ச்சைக் கருத்துகள், கருத்து மோதல்கள், சர்ச்சை அறிவிப்புகள், சர்ச்சை படங்கள் என சர்ச்சையை சுற்றியே இயங்கி வருபவர். ஜெயலலிதா - சசிகலா நட்பை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தார். கடந்த வாரம் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவியின் பார்வையில் உருவான லக்‌ஷ்மி என்.டி.ஆர் என்ற வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போது கோப்ரா என்ற படத்தில் ஆர் என்கிற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். அகஸ்த்யா மஞ்சு என்பவருடன் இந்தப் படத்தை இணைந்து இயக்கவும் உள்ளார். இந்தியாவில் வாழ்ந்த மிக ஆபத்தான கிரிமினலின் கதை என்று இது விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. உண்மையிலேயே அப்படியான ஒரு கிரிமினலின் வாழ்க்கையை ஒட்டிய பயோபிக் இது.

செவ்வாய்க்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது தொழில் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு நடிகராக நான் அறிமுகமாவதை எனது பிறந்தநாளான இன்று அறிவிக்கிறேன். என்னை நீங்கள் ஆசிர்வதித்தால் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டேன். நன்றி" என்று படத்தின் போஸ்டருடன் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், "ஒரு வழியாக ராம் கோபால் வர்மா, இந்த சர்கார் நடிப்பு என்ற தனது உண்மையான தொழிலை கண்டுபிடித்துவிட்டார்.  அடச்சே. இன்னொரு போட்டியாளர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள வர்மா, "சார் உங்கள் வாழ்த்து நான் இறந்துவிட்டதைப் போல  உணர வைக்கிறது. ஏனென்றால் இறந்தவர்கள் மட்டுமே இந்த அளவுக்குப் புகழப்படுவார்கள். ஆனால் எனது புதிய பயணத்தின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in