புற்றுநோயிலிருந்து மீண்ட இர்ஃபான் கான் ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி
புற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களுக்கு உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.
'தி லஞ்ச் பாக்ஸ்', 'லைஃப் ஆஃப் பை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழை எட்டியவர் இர்ஃபான் கான். இவர் தான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த நோய்க்கு தீவிர சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டு வந்துள்ளார் இர்ஃபான் கான். இதனைத் தொடர்ந்து தான் நலம்பெறத் துணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்ஃபான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எங்கோ வெற்றி பெறுவதில் நாம் நேசிக்கப்படுவதை மறந்து விடுகிறோம். சோதனை காலங்களில் இது நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. எனது பாதத் தடங்களை இந்த வாழ்க்கையில் விட்டுச் செல்வதற்கு முன் உங்களது அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியுள்ளவனாக இருக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
அதுவே என்னை குணமடையத் தூண்டியது. நான் மீண்டும் உங்களுடன் பயணம் செய்ய இருக்கிறேன். எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
