சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய படத்தில் சல்மான் கான் - அலியா பட்

சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய படத்தில் சல்மான் கான் - அலியா பட்
Updated on
1 min read

பாலிவுட்டில் பிரம்மாண்டமான படங்களுக்குப் புகழ்பெற்ற சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த திரைப்படத்தில் சல்மான் கானும் அலியா பட்டும் நடிப்பது உறுதியாகியுள்ளது. படத்துக்கு 'இன்ஷால்லா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன், பன்சாலியின் இயக்கத்தில் சல்மான் கான், 'ஹம் தில் தே சுக்கே சனம்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் நடிக்கும்போது தான் இருவரும் காதல் வயப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் படம் வெற்றியிடைந்தாலும் பன்சாலியுடன் சல்மான் மீண்டும் இணையவில்லை.

தற்போது 'இன்ஷால்லா' படத்தின் மூலம் சல்மான் - பன்சாலி இணைந்துள்ளனர். 'ஹம் தில் தே...' படத்தைப் போலவே இதுவும் காதல் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. 

'ஹம் தில் தே...' வெளியான போது நடிகை அலியா பட்டுக்கு 6 வயது. 'இன்ஷால்லா' படத்தில் நடிப்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அலியா, "முதல் முறையாக நான் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்துக்குச் செல்லும்போது எனக்கு 9 வயது. பதட்டத்துடன் இருந்தேன். அவரது அடுத்த படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே சென்றேன். நீண்ட நாள் காத்திருப்பு இது.

கண்களைத் திறந்து கொண்டே கனவு காணுங்கள் என்று சொன்னார்கள். நானும் கண்டேன். சஞ்சயும், சல்மானும் இணையும்போது அது மாயாஜாலம். இன்ஷால்லா என்ற இந்த அழகிய பயணத்தில் அவர்களுடன் இணையும் நாளுக்காகக் காத்திருக்க முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் கான், "20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் சஞ்சயும் நானும் அவரது அடுத்த படத்தில் ஒருவழியாக இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. அலியாவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன். இன்ஷால்லா, இந்த பயணத்தில் நாங்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப்படுவோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in