இந்தி சினிமா 2013 : முடிசூடா இளவரசியான தீபிகா படுகோன்

இந்தி சினிமா 2013 : முடிசூடா இளவரசியான தீபிகா படுகோன்
Updated on
1 min read

யார் நம்பர் ஒன் எனத் தீர்மானிக்கும் கருத்துக்கணிப்புகளுக்குப் பாலிவுட்டில் எப்போதுமே பஞ்சமிருக்காது. எத்தனை கருத்துக்கணிப்புகள் நடத்தினால்தான் என்ன? எல்லாவற்றையும் தகர்த்து, இந்திப் படவுலகின் நம்பர் ஒன் நாயகியாக முடிசூடியிருக்கிறார் தீபிகா படுகோன். 2013இல் இவர் நடித்த நான்கு படங்களின் வசூலும் தலா 100 கோடியைத் தாண்டியிருக்கிறது.

2013இல் சைஃப் அலிகானுடன் நடித்த ‘ரேஸ் 2’ முதலில் வெளியானது. அந்தப் படம் 100 கோடி வசூலைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த ‘ஏ தீவானி ஹே ஜவானி’ வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது. அதனைத் தொடர்ந்து வெளியானது ஷாரூக் கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இந்தப் படம் பல்வேறு சாதனைகளை முறியடித்தது. குறைந்த நாட்களில் 100 கோடி வசூல் என்ற சாதனை படைத்தது. தொடர்ந்து 200 கோடி வசூல் படைத்து பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

‘ஏ தீவானி ஹே ஜவானி’, ’சென்னை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்கள் தீபிகாவை நம்பர் ஒன் இடத்திற்குக் கொண்டுவந்தன. அதன்பிறகு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘ராம் லீலா’ திரைப்படம் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. பாலிவுட்டின் முன்னணி விமர்சகர்கள் பலரும் தீபிகா நடித்ததில் சிறந்த படம் ’ராம் லீலா’ என்று புகழ்ந்தார்கள். இப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ராம் லீலா படமும் 100 கோடி வசூலைத் தாண்டியதால் 2013ல் தீபிகா நாயகியாக நடித்த 4 படங்கள் 100 கோடி வசூலை தாண்டியிருக்கிறது.

நடிப்பு, அழகு, கவர்ச்சி, ஆகியவை தீபிகாவின் வெற்றிக்கும் வசீகரத்துக்கும் பின்னால் இருக்கின்றன. எத்தனையோ அழகிகளைக் கண்டுள்ள பாலிவுட்டில் தீபிகாவின் அழகு அலாதியானது. அசலான இந்திய முகம், கச்சிதமான உடலமைப்பு, உறுத்தாத கவர்ச்சி, பாத்திரத்திற்குள் ஒன்றிவிடுவது, இன்றைய யுகத்தின் பெண்களை அடையாளப்படுத்தும் ஸ்டைல் ஆகியவை தீபிகாவைத் தனித்துக் காட்டுகின்றன.

2014ம் ஆண்டும் தீபிகாவுக்கு ஏறுமுகமான ஆண்டுதான்! ரஜினியுடன் ‘கோச்சடையான்’, ஷாரூக் கானுடன் ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய இரண்டு படங்களும் வெளிவர உள்ளன. இதில் கோச்சடையான், தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பான் எனப் பல்வேறு மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள். ஹேப்பி நியூ இயர் படத்தில் ஷாரூக் கான், அபிஷேக் பச்சன் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களின் வசூலும் 100 கோடியைத் தாண்டும் என்று இப்போதே கணித்திருக்கிறார்கள்.

இத்தனை வெற்றிகளையும் வசூலையும் வாரிக் குவிக்கும் வெற்றி தேவதை தீபிகா பாலிவுட்டின் முடிசூடா இளவரசியாக விளங்குகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in