

பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' இந்தியில் அதிகாரபூர்வமாக ரீமேக் செய்யப்படவுள்ளது. நடிகர் ஆமிர்கான் இதில் நடிக்கவுள்ளார்.
டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம்.
இன்றளவும் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது.
தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவுள்ளதாக நடிகர் ஆமிர் கான் தெரிவித்துள்ளார். ஆமிர் கானின் 54-வது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அதில் பேசுகையில், "எனது அடுத்த படம் என்னவென்பது இறுதியாகிவிட்டது. அதன் பெயர் 'லால் சிங் சட்டா'. வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆமிர் கான் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. அத்வைத் சந்தன் இயக்கவுள்ளார். இது ஹாலிவுட் திரைப்படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தைத் தழுவி எடுக்கப்படும். பாராமவுண்ட் நிறுவனத்திடமிருந்து உரிமைகளை வாங்கியுள்ளோம். நான் லால் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன்.
படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பமாகும். நான் 6 மாதங்கள் முன் தயாரிப்புக்கு எடுத்துக் கொள்கிறேன். 20 கிலோ எடையைக் குறைக்க வேண்டும். ஒல்லியாக வேண்டும்.
எனக்கு 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் திரைக்கதை எப்போதுமே பிடித்தமான ஒன்று. இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய அற்புதமான கதை. வாழ்வில் நம்பிக்கை தரக்கூடிய கதை. நல்ல உணர்வைத் தரும் படம். மொத்த குடும்பத்துக்குமான படம் அது" என்றார் ஆமிர் கான்.
அத்வைத் சந்தன் இதற்கு முன் ஆமிர் கான் தயாரிப்பில் 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' படத்தை இயக்கியிருந்தார். 'தாரே ஜமீன்பார்', 'தோபி காட்' உள்ளிட்ட ஆமிர் கானின் படங்களில் பணிபுரிந்துள்ளார்