

'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' படக்குழு படம் பார்க்க விடுத்த அழைப்பை புறக்கணித்து விட்டார் ரஜினிகாந்த் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தி படமான 'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரஜினிகாந்த். அம்மனுவில், "இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளேன்.கடந்த பல ஆண்டுகளாக இந்திய சினிமாத் துறையில் புகழ்பெற்ற நடிகராக திகழ்கிறேன்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த வர்ஷா புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனம் 'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளது. எனினும் எனது பெயரைப் பயன்படுத்த எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. இந்தப் படத்தால் எனது புகழும், நற்பெயரும் பாதிக்கப்படும் என்பதால் எனது பெயரையோ, எனது படங்களையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதி, அப்படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார்.
'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' இயக்குநர் பைசல் "நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகிய யாருக்கு வேண்டுமானாலும் எனது படத்தை திரையிட்டு காட்டத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இயக்குநர் பைசல் தெரிவித்தது மட்டுமன்றி, படக்குழு சம்பந்தப்பட்டவர்களும் ரஜினியிடம் படத்தை திரையிட்டு காட்ட அனுமதி கேட்டு வந்தார்கள். ஆனால் ரஜினி படக்குழுவின் கோரிக்கை நிராகரித்து விட்டார். ரஜினி மட்டுமன்றி அவரது குடும்பத்தினர் யாருமே இந்த விஷயத்தில் செவி சாய்க்க விரும்பவில்லையாம்.
இந்நிலையில், இவ்வழக்கு அக்டோபர் 7ம் தேதி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.