

தணிக்கைச் சான்றிதழுக்காக 8 மாத காலம் காத்திருந்த பாலிவுட் திரைப்படம் 'நோ ஃபாதர்ஸ் இன் காஷ்மீர்' வரும் ஏப்ரலில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குநர் அஸ்வின் குமார் எழுதி இயக்கியுள்ள இப்படம் தயாரிக்கப்பட்டு முடிவடைந்த நிலையிலும் நீண்டகாலமாக வெளிவராமல் முடங்கிக் கிடந்தது. தற்போது இப்படம் ஏப்ரலில் வெளியாவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் தரப்படாமல் சென்சார் போர்டு இழுத்தடித்தது. இதனால் இதனை விரைவில் வெளியிடக் கோரி தயாரிப்பாளர் இதற்கென உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இப்படத்தைப் பார்த்தது.
பின்னர் இப்படத்தில் சிற்சில இடங்களில் இடம் பெற்ற காட்சிகளை வெட்டினால்தான் யு சான்றிதழ் தரப்படும் என்ற நிலை. ஒருவழியாக அதற்கு ஒப்புக்கொண்டு அவர்கள் குறிப்பிட்ட காட்சிகள் வெட்டப்பட்டன. தற்சமயம் 'நோ ஃபாதர்ஸ் இன் காஷ்மீர்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் அஸ்வின் குமார் தெரிவித்ததாவது:
''பிரிட்டிஷ் காஷ்மீரி இளம்பெண் நூர், காஷ்மீருக்கு தனது தந்தையைத் தேடி வருகிறாள். தந்தை மறைவுக்குப் பின்னுள்ள ரகசியங்களைத் தேடுகிறாள். அப்போது இன்றைய காஷ்மீரின் நிஜங்கள் அவளுக்கு அனுபவங்களாகக் கிடைக்கின்றன.
இளைஞர்களிடம் எப்பொழுதும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒவ்வொருவருக்குமான வாழ்வியல் வலி அதை மறக்கடிக்கவும் செய்து விடுகிறது.
காஷ்மீர் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தைப் பார்த்த பிறகு இந்தியா முழுமையும் உள்ள இளைஞர்கள் நிச்சயம் காஷ்மீர் இளைஞர்களை கைகுலுக்கி கரம் கோப்பார்கள்'' என்று அஸ்வின் குமார் தெரிவித்தார்.
இப்படத்தில் குல்பூஷண் கர்பாந்தா, சோனி ரஸ்டான், அன்ஷூமான் ஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை லாயிக் டூரி, கிறிஸ்டோப் மிங்க், ஒளிப்பதிவு ஜான் மேரி டெலோராம்.
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5 அன்று வெளியாகிறது.