

ரஜினி, விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர்களது சாதாரணப் படங்கள் கூட அதிகம் வசூலிக்கின்றன என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்
பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தனியார் நிகழ்ச்சியில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.
இதில், தென்னிந்தியத் திரைப்படங்களால் நீங்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறீர்களா என்று தொகுப்பாளர் கேட்பார். அதற்கு ரோஹித் ஷெட்டி பதிலளிக்கும்போது, ''இன்றைய பாலிவுட் திரைப்படங்களின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டும்போது நாம் கொண்டாடுகிறோம். இதே வசூல் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் எட்டப்படுகிறது. நாம் இதில் என்ன பார்க்க வேண்டும் என்றால் ஒரு மாநிலத்தில் மட்டும் இத்தகைய வசூலைச் செய்கிறார்கள் என்பதைத்தான்.
நாம் இந்தியா முழுவதிலிருந்துதான் இந்த வசூலைப் பெறுகிறோம். அவர்களது இலக்கை எட்ட நாம் சிரமப்படுகிறோம்.
இதற்குப் பல காரணிகள் உள்ளன. திரையரங்குகள், வரி போன்றவை. இதில் முக்கியமானது அங்கு ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர் மன்றங்கள் வலுவாக உள்ளன. ரஜினி, விஜய், சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் இவர்களது திரைப்படம் சுமாராக இருந்தாலும் அதிக வசூலை எட்டி விடுகிறது.
ஏனெனில் அவர்களது ரசிகர்கள் நிச்சயம் திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பார்கள். அவர்கள் ரசிகர்களுக்காக நிறைய செய்கிறார்கள்'' என்று ரோஹித் ஷெட்டி கூறினார்.
ரோஹித் ஷெட்டி 'கோல்மால்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'சிம்மா' உள்ளிட்ட பல பாலிவுட் படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது.