

ஜெயலலிதா கதையும், என் கதையும் ஒரே மாதிரியாக இருக்கிறது என பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், ‘தலைவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. இந்தியில் இந்தப் படத்துக்கு ‘ஜெயா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். விஜய் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதில், ஜெயலலிதா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஒப்பந்தமாகியுள்ளார். ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்துக்கு இணை கதாசிரியராகப் பணிபுரிகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கங்கணா, “எனக்கு எப்போதுமே மாநில மொழிப் படங்களில் நடிக்க ஆர்வமுண்டு. தமிழகம் அல்லது ஆந்திரா மாதிரியான மாநிலங்களுக்குப் போகும்போது, அங்கிருக்கும் மக்கள் உள்ளூர் திரைத்துறை தயாரிக்கும் படங்களை மட்டுமே பார்க்கின்றனர் என்பது புரிகிறது. எனவே, தேசத்தின் அந்தப் பகுதி மக்களிடம் நமக்கு ஒரு இணைப்பு இல்லை. அங்கு பணியாற்ற ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். சரியாக இந்த வாய்ப்பு வந்தது.
நான் எனது சொந்த பயோபிக் வேலைகளில் இருந்தேன். ஆனால், ஜெயலலிதாவின் கதையும், என் கதையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவரது கதை, என்னுடையதை விட பெரிய வெற்றிக்கதை. இந்தக் கதையைக் கேட்கும்போது, என் கதைக்கும் அதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்த்தேன். எனவே, எனது கதையைச் சொல்லும் படமா அல்லது அவரது கதையைச் சொல்லும் படமா? எனும்போது, நான் அவரது கதையைத் தேர்ந்தெடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லாச் சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு.