போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் சஞ்சய் தத்

போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் சஞ்சய் தத்
Updated on
1 min read

இந்தியாவிலிருந்தே போதைப் பழக்கத்தை தூக்கியெறிந்து போதை இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சஞ்சய் தத் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்த 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' திரைப்படம் இந்திய அளவில் வெற்றிபெற்றது. இப்படம், பலமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அப்படங்களும் நல்ல வசூலை ஈட்டின.

சஞ்சய் தத் வாழ்க்கையே திரைப்படமாக எடுக்கப்பட்டது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட 'சஞ்சு' திரைப்படம் மதுவோடு போராடிய சஞ்சய் தத்தின் வாழ்க்கையைப் பேசியது. இதில் போதையிலிருந்து மீண்டெழும் சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்திருந்தார்.

சஞ்சய் தத் தற்போது போதைக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்மிகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்திவரும் #DrugFreeIndia பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள சஞ்சய் தத் பதிவு வருமாறு:

''இந்தியாவில் இருந்து போதைப் பழக்கத்தை தூக்கி எறிவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். #DrugFreeIndia பிரச்சாரம் இதைநோக்கி ஒரு படியை எடுத்துவைத்துள்ளது. என் தனிப்பட்ட அனுபவங்களின் காரணமாக, இப்பிரச்சினை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. மேலும் எனது நாட்டின் இளைஞர்களுக்கு உதவ விரும்புகிறேன்''.

இவ்வாறு சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கப்படும் போதை மருந்துக்கு எதிரான  பிரச்சாரத்திற்கு சஞ்சய் தத் தவிர, சோனாக்‌ஷி சின்ஹா, வருண் தவான், கபில் ஷர்மா, ப்ரிணிதி சோப்ரா மற்றும் வருண் ஷர்மா ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in