

பிரபல பாலிவுட் நடிகையான கங்கணா ரணாவத்தின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இப்படத்தை அவரே இயக்க உள்ளார்.
'மணிகர்னிகா' படத்தில் பணியாற்றியவரும்' பாகுபலி'யின் கதாசிரியரான கே.வி. விஜயேந்திரா இப்படத்தின் கதையை எழுத உள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் இப்படம் திரையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் தயாராக உள்ளதாக கங்கணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்கணா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக என் சொந்தக் கதையே வெளியாக உள்ளது.
என்னை பொருளாக எண்ணி எடைபோடாமல், எப்படி இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொண்ட மக்களின் அன்பால் இந்த உயரத்தை அடைந்துள்ளேன்.
சுமார் 12 வாரங்களுக்கு முன்னதாக, என் வாழ்க்கையை எழுதுகிறேன் என்று விஜயேந்திரா கேட்டுக்கொண்டார். அப்போது எனக்கு அதிர்ச்சியாகவும் யோசனையாகவும் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவரின் மீது நம்பிக்கை வைத்து அனுமதி கொடுத்துவிட்டேன்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, தொடர்பில் இருந்த நபர்களை வெவ்வேறு கோணத்தில் அணுக உள்ளோம். ஆனால் அதில் யாரின் பெயரும் குறிப்பிடப்படாது.
சினிமாவின் முடிவில் வெற்றியாளரின் கதை இருக்கும். பாலிவுட்டுக்கு எவ்விதத்திலும் துளியும் சம்பந்தப்படாத ஒருத்தி 'கேங்ஸ்டர்', 'தனு வெட்ஸ் மனு', 'ஃபேஷன்', 'குயின்' மற்றும் 'மணிகர்னிகா' உள்ளிட்ட முக்கியமான படங்களை அளிக்க முடிந்தது குறித்தும் 3 தேசிய விருதுகளைப் பெற்றது குறித்தும் சொல்லப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
31 வயதான கங்கணா, தமிழில் 'தாம் தூம்' என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.