

குண்டாக இருப்பதாக வெளியான செய்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் பதிலடி கொடுத்துள்ளார் நேஹா துபியா.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நேஹா துபியா. அங்கட் பேடி என்ற நடிகரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, நேஹா துபியா மிகவும் குண்டாகிவிட்டார் என்று பாலிவுட் இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டன. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார் நேஹா துபியா.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''நான் யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், இப்படி உருவத்தை வைத்து அவமானப்படுத்துவது என்னைக் கொஞ்சமும் பாதிக்காது. ஆனால், இதைப் பற்றி பேச நினைக்கிறேன்.
ஏனென்றால் பிரபலமானவர்களை மட்டுமல்ல, யாரையுமே இப்படி உருவத்தை வைத்து அவமானப்படுத்துவது கூடாது. ஒரு தாயாக எனது மகளுக்காக ஆரோக்கியமாக, உற்சாகமாக இருக்க நினைக்கிறேன். அதனால் நான் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறேன்.
சில சமயங்களில் இரண்டு வேளை பயிற்சி செய்கிறேன். ஏனென்றால் எனக்கு ஆரோக்கியம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகம் வைத்திருக்கும் அழகை வைத்து தீர்மானிக்கும் தரத்தில் இருப்பதை நான் ஆரோக்கியமாக நினைக்கவில்லை.
இனி எதிர்காலத்தில் இப்படியான வெறுப்பை உமிழும் கருத்துகளைப் பகிராமல் மக்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள் என நம்புகிறேன். பாட்டன் ஆஸ்வால்ட் சொன்னதைப் போல, "அன்புடன் இருங்கள், வெளியே நிறைய குழப்பங்கள் உள்ளன".
இவ்வாறு நேஹா துபியா தெரிவித்துள்ளார்.