

தனது நடிப்பைத் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கையின் மீது ரசிகர்களின் கவனம் செல்வதால் சர்ச்சைகளிலிருந்து தள்ளியிருக்கவே தான் விரும்புவதாக நடிகர் நவாசுதின் சித்திக் கூரியுள்ளார்.
தமிழில் முதன்முதலாக 'பேட்ட' படம் மூலம் வில்லனாக அறிமுகமான நவாசுதின் பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததற்காக ஒவ்வொரு படத்துக்கும் பாராட்டுகளைப் பெறுபவர்.
சமீபத்தில் ரிதுபர்னா சாட்டர்ஜியுடன் இணைந்து இவர் எழுதிய சுயசரிதை நூல் 'ஆன் ஆர்டினரி லைஃப்' சர்ச்சைக்குள்ளானது. அதில் முன்னாள் மிஸ் இந்தியா நிஹாரிகா சிங் மற்றும் நடிகை சுனிதா ராஜ்வருடனான தனது உறவு குறித்து நவாசுதின் விவரித்திருந்தார். ஆனால் இப்படி எழுதுவது பற்றி அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறவில்லை.
இந்தப் பிரச்சினை பெரிதானவுடன் நவாசுதின் அந்தப் புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கோரினார். மேலும், நவாசுதின் தனது மனைவியை வேவு பார்க்க தனியார் டிடெக்டிவ் ஒருவரை வேலைக்கு வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றியெல்லாம் சமீபத்தில் பிடிஐக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ள நவாசுதின், "நான் எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறேன். நான் ஒரு நடிகன். என் வேலையைச் செய்ய நினைக்கிறேன். வேறு யாரைப் பற்றியும், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பவை பற்றியும் நான் பேச விரும்பவில்லை. மக்களின் கவனம் அதன் மீது போக வேண்டாம் என நினைக்கிறேன். நான் எனது நடிப்பினால் பிரபலமாகியிருக்கிறேன். அதனால் அதில் கவனம் செலுத்த மட்டுமே விரும்புகிறேன்.
இதில் நான் ஏதுவும் தவறாக உணரவில்லை. ஏன் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பிரபலங்களும் மனிதர்களே. சின்ன விஷயங்களுக்குக் கூட அனைவரும் பிரபலங்களை விமர்சிக்கின்றனர். அது நடக்கக்கூடாது. அவர்களும் சராசரி மனிதர்கள்தான்.
மீ டூ பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. ஏன் தேவையின்றி அதுபற்றி மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். எனக்கு எனது தொழில் முக்கியம். பல வருடப் போராட்டத்துக்குப் பின் எனக்கு வாய்ப்புகள் வருகின்றன. சர்ச்சைகளிலிருந்து தள்ளியிருக்க நினைக்கிறேன். சர்ச்சைகள் என்னைப் பாதிக்கிறதா இல்லையா என்பதும் எனது தனிப்பட்ட விஷயமே" என்று கூறியுள்ளார்.