

போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கரீனா கபூர் போட்டியிடுவதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அதுகுறித்துப் பதிலளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்கவும் பிரபலங்களை ஈர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கரீனாவை நிற்க வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவரின் பெயரை காங்கிரஸ் தலைவர்கள் குடு சவுஹான் மற்றும் அனாஸ் கான் ஆகியோர் முன்மொழிந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இத்தகவலை கரீனா கபூர் கான் மறுத்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ''நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை.
இதுகுறித்து யாரும் என்னிடம் அணுகவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் படங்களில் மட்டுமே இருக்கிறது; இருக்கும்'' என்றார்.
கரீனாவின் கணவர் சயிஃப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் போபாலில் பிறந்தவர். மன்சூரின் தாத்தா, போபாலின் கடைசி நவாபாக ஆட்சி செய்தவர் ஆவார்.
பாஜகவின் கோட்டையாகத் திகழும் போபாலில், காங்கிரஸ் 1984-ல் இருந்து 25 வருடங்களாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.