

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தைக் குறிப்பதாக ‘ஸ்ரீதேவி பங்களா’ படக்குழுவினருக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மலையாள இயக்குநர் உமர் அப்துல் வகாப் இயக்கத்தில், ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்த திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடலில் ப்ரியா பிரகாஷ் வாரியர் புருவத்தைத் தூக்கி கண் சிமிட்டுவது போன்ற காட்சி கடந்த வருடம் இணையத்தில் பெரும் வைரலானது. அந்தப் பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் மாம்புலி இயக்கத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள 'ஸ்ரீதேவி பங்களா' என்ற இந்திப் படத்தின் டீஸர் வெளியானது. 1.49 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீஸரில் ஒரு நடிகையின் வாழ்க்கை காட்டப்படுகிறது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் தொடங்கும் டீஸர் இறுதியில் அந்த நடிகை ஒரு பாத் டப்பில் இறந்து கிடப்பது போன்று முடிகிறது. டீஸரில் அந்த நடிகை தன் பெயர் ‘ஸ்ரீதேவி’ என்றும் குறிப்பிடுகிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உறவினர் திருமணத்தில் பங்கேற்க குடும்பத்துடன் துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்குள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறையில் இருந்த பாத் டப்பில் ஸ்ரீதேவி இறந்து கிடந்தார்.
'ஸ்ரீதேவி பங்களா' படத்தின் டீஸர் இந்த சம்பவங்களை நினைவுப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் 'ஸ்ரீதேவி பங்களா' படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
'ஸ்ரீதேவி பங்களா' படத்தின் இயக்குநர் பிரகாஷ் மாம்புலி இதை உறுதிப்படுத்தியுள்ளார். “கடந்த வாரம் போனி கபூர் எங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். ’ஸ்ரீதேவி பங்களா’ படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஸ்ரீதேவி என்பது ஒரு பொதுவான பெயர்தான் என்று போனி கபூரிடம் கூறினேன். எனது கதையின் பிரதான பாத்திரமும் ஒரு நடிகை. அவ்வளவே” என்று அவர் கூறியுள்ளார்.