

இதுவரை நான் எடுத்ததில் சிறந்த படத்தை எடுக்க வேண்டும் என்பதே 2019-ல் தனது உறுதிமொழி என்று தெரிவித்துள்ளார் நடிகர் ஆமிர் கான்.
புது வருடம் பிறந்தவுடன் அந்த வருடத்தில் தாங்கள் செய்ய இருப்பதைக் குறிப்பிட்டு உறுதிமொழி எடுப்பது பலரது வழக்கம். பாலிவுட் நட்சத்திரங்களின் புது வருட உறுதிமொழிகள் செய்தி ஆவதும் வழக்கமே. அப்படி இந்த வருடம் நடிகர் ஆமிர் கான் தனது புது வருட உறுதி மொழியை தனது ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்.
எனது புதுவருட உறுதிமொழிகள்:
மீண்டும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும், 2018-ல் எனது தவறுகளிலிருந்து நான் கற்றுக்கொண்டவற்றைப் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். எனது சிறந்த படத்தை எடுக்க வேண்டும். புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும். எனது தாய், குழந்தைகள் மற்றும் கிரணுடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ நான் காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று ஆமிர் கான் குறிப்பிட்டுள்ளார்.
2018-ல் ஆமிர் கான் நடிப்பில் வெளியான 'தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்' படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.