

என்னை அவரிடம் அறிமுகப்படுத்த முடியுமா? என நான் முதலில் கேட்ட தருணம் என ஹிலாரியுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் நடிகை வித்யா பாலன்.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு, உதய்பூர் நகரம் கோலாகலம் பூண்டுள்ளது. அங்கு உள்ளூர் பிரபலம் முதல் உலக பிரபலம் வரை குவிந்து வருகின்றனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன், இஷாவின் திருமணத்துக்காக வந்துள்ளார்.
அங்குதான் வித்யா பாலன் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து, அதை தனது இஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராமில், "இதுதான் என் வாழ்வின் முதன்முறை. என்னை அவரிடம் அறிமுகப்படுத்த முடியுமா என நான் கேட்ட முதல் தருணம். நன்றி ஸ்மிருதி இராணி. எனக்கு ஹிலாரி கிளின்டன் மீது அவ்வளவு நேசம். அவர் எப்போதும் விடாமுயற்சி கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, அவர் வெற்றி பெறுவார் என்றே நான் நம்பினேன். ஆனால், அவர் தோல்வியடைந்தபோது வருந்தினேன்.
ஆனால், சிறிது நாளிலேயே ஒரு கண்ணாடி மேற்கூரை உடைந்தால்தான் வானத்தை எட்ட முடியும். அத்தகைய ஒரு திரையைத்தான் ஹிலாரி உடைத்திருக்கிறார். எதிர்காலத்தில் யாராவது ஒருவர் அந்த வானத்தை அடைவர் எனப் புரிந்து கொண்டேன். எங்களுக்கு எல்லாம் ஒரு ஹீரோவாக இருப்பதற்காக நன்றி ஹிலாரி" எனப் பதிவிட்டுள்ளார்.