

சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'தாக்கரே' பயோபிக் படத்தின் ட்ரெய்லரை நடிகர் சித்தார்த் கடுமையாகச் சாடியுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் மிக முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர் பால் தாக்கரே. அவர் உருவாக்கிய சிவசேனாவை தற்போது அவரது மகன் உத்தவ் தாக்கரே நிர்வகித்து வருகிறார். கட்சியின் முக்கியப் பிரமுகரும் எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் 'தாக்கரே'.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. படத்தில் பால் தாக்கரே கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் நவாசுதீன் சித்திக்.
மகாராஷ்டிரா மண்ணின் மைந்தர்களுக்கே என்பதுதான் சிவசேனாவின் பிரதான கொள்கை. படத்தின் ட்ரெய்லரிலும் அதனைப் பறைசாற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. மராட்டிய மொழியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் ட்ரெய்லர் பரவலாக விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்ரெய்லர் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தாக்கரே படத்தின் மராத்தி ட்ரெய்லருக்கு தோதாக சப் டைட்டில் போடாமல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படத்தில் வெறுப்பு வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது. ஹீரோயிஸம் போர்வையில் வெறுப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இசை, கைதட்டல்கள், உறுமல்கள், மூர்க்கத்தனம் நிறைந்திருக்கிறது. மும்பைக்கு பெருமை சேர்க்கும் இடம் பெயர்ந்தவர்கள், தென்னிந்தியர்கள் என லட்சக்கணக்கானோர் தவிர்க்கப்பட்டிருக்கின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் #HappyElections! என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில் 'தாக்கரே' படம் அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பால் உணர்த்தவே இவ்வாறு ஒரு ஹேஷ்டேக்கை அவர் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.