

இன்று (நவ. 2) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் ஷாருக் கான், நள்ளிரவில் தனது வீட்டுக்கு வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நள்ளிரவில் சில நிமிடங்கள் வெளியே வந்த ஷாருக் கான், ரசிகர்களிடம் கைகூப்பி நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் வருவதை முன்னிட்டு மன்னத்தில் உள்ள ஷாருக் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறும்போது, ''ஷாருக் கானின் பார்வைக்காக நாங்கள் நீண்ட நேரம் காத்திருந்தோம். எங்களுடைய சூப்பர் ஸ்டார் அவர்'' என்றார்.
தனது பிறந்தநாள் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக் கான், ''மனைவிக்கு கேக் ஊட்டிவிட்டேன். என்னுடைய ரசிகக் குடும்பங்களைச் சந்தித்தேன். என் குழந்தைகளுடன் விளையாடினேன். மகிழ்ச்சியான பிறந்த நாள். அனைவருக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
ஷாருக் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஷாருக், கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா நடிக்கும் 'ஜீரோ' படத்தின் ட்ரெய்லர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.