

25 வருடங்களுக்கு முன்பு நானும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டேன் என்று பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் தாங்கள் எதிர்கொண்ட அனுபவம் குறித்து சமூக வலைதளங்களில் #Metoo-வைக் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
சினிமாத்துறை, பத்திரிகைத் துறை, அரசியல் என பல தரப்புகளில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகத் துணை நிற்கிறேன். அவர்கள் கடந்து வந்த, அந்தக் கடினமான பாதையை என்னால் உணர முடிகிறது. நானும் 25 வருடங்களுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டேன்.
அதனை நினைத்து எனக்கு இப்போது கோபம் உள்ளது. சில மனிதர்கள் இந்த வலியைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். மற்ற மனிதனின் வலியைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானது.கொடுக்கப்பட்ட புகார்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும்” என்றார்.