தீபிகா தலைக்கு வெகுமதி அறிவித்த சூரஜ் பால் ராஜினாமாவை ஏற்க 10 மாதங்களுக்குப் பிறகு பாஜக மறுப்பு; தாய் வீடு திரும்பியதாக சூரஜ் பெருமிதம்
'பத்மாவதி' பட சர்ச்சையின்போது தீபிகா தலைக்கு வெகுமதி அறிவித்த ஹரியாணா மாநில பாஜகவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சூரஜ் பால் அமுவின் ராஜினாமாவை ஏற்க அம்மாநில பாஜக தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தாய் வீடு திரும்பிய உணர்வு ஏற்பட்டுள்ளதாக சூரஜ் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் 'பத்மாவதி'. இத்திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் படம் வெளியாகும் நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, நாயகியாக நடித்த தீபிகா படுகோன் ஆகியோரின் தலையைக் கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக ஹரியாணா மாநில பாஜகவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சூரஜ் பால் அறிவித்தார்.
அந்த அறிவிப்பு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சூரஜ் பாலின் அறிவிப்புக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என அக்கட்சி அறிவித்தது. அதைத்தொடர்ந்து சூரஜ் பால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சூரஜ் பால் அமு, ''பாஜகவின் ஹரியாணா மாநிலத்தில் நான் வகித்து வந்த தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை பல மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தேன். ஆனால் அதை மாநில பாஜக தலைவர் சுபாஷ் பரலா ஏற்க மறுத்துவிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் இருந்தவன் நான். கடந்த 10 மாதங்களாக கட்சியில் இருந்து விலகி இருந்த கடினமான காலகட்டத்தைக் கடந்துவிட்டேன். இப்போது தாய் வீடு திரும்பிய உணர்வு ஏற்பட்டுள்ளது'' என்றார்.
