

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகார் விவாதங்களைக் கிளப்பியதை அடுத்து, 'ஹவுஸ்புல் 4' படத்தில் இருந்து படேகர் விலகியுள்ளார்.
படத்தில் நடிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் விலகுவதாகத் தெரிவித்துள்ளார் படேகர்.
முன்னதாக, நடிகை தனுஸ்ரீ தத்தா 2008-ல் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின் போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என பரபரப்புப் புகார் கூறினார். அவருக்கு நடிகை ட்விங்கிள் கண்ணா ஆதரவு தெரிவித்தார்.
அதேபோல 'ஹவுஸ்புல்' 4 படத்தின் இயக்குநர் சஜித் கான் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதற்கிடையே ட்விங்கிள் கண்ணாவிடம்,''நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்கள்; ஆனால் உங்கள் கணவர் நானா படேகருடன் 'ஹவுஸ்புல் 4' படத்தில் நடிக்கிறாரே?'' என்று தனுஸ்ரீ கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து அக்ஷய் குமார் 'ஹவுஸ்புல் 4' படப்பிடிப்பை ரத்து செய்தார். பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் உடன் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார்.
இதனால் படத்தின் இயக்குநர் சஜித் கான், 'ஹவுஸ்புல் 4' படத்தில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து நானா படேகரும் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து படேகரின் மகன் மல்ஹர் கூறும்போது, ''நானா சாகேப் மீது போலியான குற்றச்சாட்டுகளே சுமத்தப்பட்ட போதும் படத்தில் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்பட அவர் விரும்பவில்லை. இதனால் 'ஹவுஸ்புல் 4' படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.