தனுஸ்ரீ பாலியல் புகார்; செய்தியாளர் சந்திப்பை திடீரென ரத்து செய்த நானா படேகர்

தனுஸ்ரீ பாலியல் புகார்; செய்தியாளர் சந்திப்பை திடீரென ரத்து செய்த நானா படேகர்
Updated on
1 min read

நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகார் குறித்து விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பை நானா படேகர் திடீரென ரத்துசெய்துள்ளார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின் போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என பரபரப்புப் புகார் கூறினார்.

பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் அவர் கூறினார்.

தனுஸ்ரீ தத்தாவுக்கு பாலிவுட் பிரபலங்களில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ள நிலையில், நடிகர் நானா படேகர் தனது நிலைப்பாடு குறித்து விளக்க செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக படேகரின் மகன் மல்ஹர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி அனுப்பிய அவர், ''திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறோம்'' என்றார்.

முன்னதாக, தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகார் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, நானா படேகர் சிரித்து மழுப்பியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in