

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கின் டைட்டில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. ஹீரோவாக விஜய் தேவரகொண்டாவும், ஹீரோயினாக ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளனர். கடந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது இந்தப் படம். 5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 50 கோடி ரூபாயை வசூலித்தது.
தெலுங்கு ரசிகர்களைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் இந்தப் படம் ஈர்த்ததால், பிற மொழிகளிலும் இதை ரீமேக் செய்து வருகின்றனர். சந்தீப் ரெட்டியே இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார். முரட் கெதானி மற்றும் அஸ்வின் வர்தே இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்தியில், ஹீரோவாக ஷாகித் கபூர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ‘எம்.எஸ்.தோனி’ படத்தில், தோனியின் மனைவி சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்த கியாரா, ‘பரத் அனே நேனு’ படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தி ரீமேக்கிற்கு ‘கபிர் சிங்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். டைட்டில் லோகோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் (2019) ஜூன் மாதம் 21-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிலும் ‘அர்ஜுன் ரெட்டி’ படம் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், துருவ் விக்ரம், மேகா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.