

பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில், குறைவான திரையரங்குகள் இருந்தன. ஆனால் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றால், அது வாய்மொழியாகவே பரவி வெற்றி பெற்றது. இன்று நிலைமை மாறிவிட்டது. அதிகமாக விளம்பரப்படுத்துகின்றனர்.
ஜப்பானிய படமான ‘டெமன் ஸ்லேயர்’ இங்கு எப்படி ஓடுகிறது? அதை விளம்பரப்படுத்த யாராவது வந்தார்களா? ஹாலிவுட் படமான ‘எஃப் 1’ இங்கு ஏன் ஓடுகிறது. பிராட் பிட் அதை விளம்பரப்படுத்த இந்தியா வந்தாரா? இல்லை. இருந்தும் அதற்கு வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால் மக்கள் நல்ல கதைகளைத் தேடுகிறார்கள். நன்றாக இருந்தால், பார்க்கிறார்கள். இங்கு புரமோஷனுக்கு செலவழிப்பது வீண்தான். பாலிவுட்டில், விளம்பரத்துக்கான எந்த வரம்புமில்லை.
விளம்பரம் முக்கியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் குறிப்பிட்ட அளவுக்குத்தான். ஒருவரிடம் அதிகப் பணம் இருந்தால், அவர்கள் நகரம் முழுவதும் விளம்பரப் பலகைகளை வைப்பார்கள், பெரும்பாலான சேனல்களில் விளம்பரப் படுத்துவார்கள். இந்த வெளிச்சத்தில் சிறிய படங்கள் தொலைந்து போகும். இந்த சமத்துவமின்மைதான் சினிமா துறையைப் பலவீனப்படுத்துகிறது. இது சினிமாவின் பன்முகத் தன்மையை அழித்துவிடும். தமிழ், தெலுங்கு சினிமாவில் விளம்பரப்படுத்த ஒரு வரையறை இருக்கிறது. அதை பாலிவுட்டும் பின்பற்ற வேண்டும்.
அதோடு, விளம்பரம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் கதை சுவாரஸ்யமாக இல்லாவிட்டால், பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது. கதை அவர்களுக்கு நெருக்கமாக இருந்தால் மக்களே அதை விளம்பரப்படுத்துவார்கள். அதுதான் சினிமாவின் உண்மையான வெற்றி. இவ்வாறு அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.