

கோன் பனேகா குரோர்பதி சீசன் 17 நிகழ்ச்சியின் மூலம் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான சிறுவன் இஷிட் பட் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கோன் பனேகா குரோர்பதி சீசன் 17 நிகழ்ச்சியை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அண்மையில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஜராத்தைச் சேர்ந்த இஷிட் பட் என்ற ஐந்தாம் வகுப்பு சிறுவன் கலந்து கொண்டார்.
அமிதாப் பச்சன் கேள்விகளை கேட்டு முடிக்கும் முன்னரே பதிலை சொல்லி மிகுந்த ஆர்வத்துடன் அந்த சிறுவன் நடந்து கொண்டார். அமிதாப் பச்சனை ஆப்ஷன்களை கூட சொல்லவிடாமல், ‘ஆப்ஷன் எல்லாம் வேண்டாம், இதுதான் பதில்.. லாக் செய்யுங்கள்” என்று கூறி இந்த சிறுவன் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. எனினும் ராமாயணம் குறித்த ஒரு கேள்விக்கு இதே ஆர்வத்துடன் தவறான பதிலை மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லி போட்டியை விட்டு வெளியேறியதால் இஷிட் பட் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகினார்.
தொடர்ந்து அந்த சிறுவனையும், அவரது பெற்றோரையும் இணையவாசிகள் மீம்ஸ் வாயிலாக கடுமையாக ட்ரோல் செய்துவந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரில் கணக்கு ஒன்றை தொடங்கிய இஷிட் பட் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பான பதிவில், “குரோர்பதி நிகழ்ச்சியில் எனது நடத்தைக்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் பேசிய விதத்தால் பலர் புண்பட்டிருக்கின்றனர் மற்றும் அதிருதி அடைந்தனர் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன். அந்த நேரத்தில், நான் பதட்டமடைந்தேன். என் அணுகுமுறை முற்றிலும் தவறாகிவிட்டது. திமிராக நடந்து கொள்வது எனது நோக்கமல்ல. அமிதாப் பச்சன் சார், மற்றும் முழு கேபிசி குழுவையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
வார்த்தைகளும் செயல்களும் நாம் யார் என்பதைப் பிரதிபலிக்கின்றன என்பது பற்றிய ஒரு பெரிய பாடத்தை நான் கற்றுக்கொண்டேன், குறிப்பாக இவ்வளவு பெரிய மேடையில். எதிர்காலத்தில் நான் இன்னும் பணிவாகவும், மரியாதையாகவும், சிந்தனையுடனும் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரோல்களை தாண்டி பலரும், ‘இஷிட் பட் ஒரு சிறுவன், இவ்வளவு சிறிய வயதில் அவனை இவ்வளவு ட்ரோல் செய்வது அவனது எதிர்காலத்தை பாதிக்கும்” என்று ஆதரவுக் குரலும் எழுப்பி வருகின்றனர்.