

ஒவ்வொரு மொழி திரையுலகிலும் குறைந்தது இரண்டு பிரிவுகள் இருக்கும். ஒன்று, முழு வணிக சினிமா. அதாவது மசாலாப் போக்குகள். இன்னொன்று, அதற்கு நேர்மாறான சீரிய சமூகப் பிரச்சனைகளை கலைநுட்பங்களுடன் விமர்சிக்கும் ‘பாரலல் சினிமா’ (Parallel cinema) என்ற போக்கு. இதைத் தாண்டி கலை சினிமா என்ற ஒன்றும் ஆங்காங்கே அறிவுஜீவித வட்டாரங்களில் பார்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இத்தகைய நடவடிக்கைகள் 70, 80-கள் மற்றும் 90-களின் முதல் பாதி வரை கூட உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.
வட இந்திய பாரலல் சினிமா / கலை சினிமா வகையில் கோவிந்த் நிஹாலினி, குமார் சஹானி, ஷியாம் பெனகல், சத்யஜித் ரே, மிருணாள் சென், கேத்தன் மேத்தா, குல்சார், மணிகவுல் போன்றவர்கள் சமூக விமர்சனப் படங்களைக் கொடுத்தனர். ஷியாம் பெனகல் படங்களில் அமிதாப் பச்சனையோ, தர்மேந்திராவையோ நாம் பார்க்க முடியாது.
நடிகைகள் 70-களில் தொடங்கி வணிக / மசாலா படங்களில் ஸ்டீரியோ டைப் ரோல்களில் பெரும்பாலும் நடிப்பார்கள். அதாவது, ஹீரோவுடன் காதல், டூயட், கொஞ்சம் கவர்ச்சி என்று அந்த ரோல்கள் பெரும்பாலும் ஸ்டீரியோ டைப்கள்தான். அந்தக் காலக்கட்டங்களில் விதிவிலக்கான நடிகைகளில் ஸ்மிதா பாட்டீல், ஷபனா ஆஸ்மி அடங்குவார்கள். இதில் ஸ்மிதா பாட்டீல் மைய நீரோட்ட சினிமாவில் ஒன்றிரெண்டு படங்களில் நடித்துள்ளார். அமிதாப் பச்சனுடன் ‘நமக்ஹலால்’, ‘ஷக்தி’ ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார்.
ஆனால், ஸ்மிதா பாட்டீல் என்றால் நினைவுக்கு வருவது நிஷாந்த், மந்தன், மண்டி, பூமிகா, சத்யஜித் ரேயின் சத்கதி, மலையாள இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில் ‘சிதம்பரம்’, அர்த், அர்த் சத்யா, பஜார், மிர்ச் மசாலா, ஆக்ரோஷ், சக்ரா என்று அவரது நிறைய நடிப்புக் கலைக்காக நினைவில் கொள்ளக் கூடிய படங்களாக மிளிர்கின்றன.
இந்தப் படங்களில் எல்லாம் ஸ்மிதா பாட்டீல் திரையில் உண்மையில் ஒரு வேறு ஒரு ரக வெளிப்பாடுதான். பிற்பாடு வணிக சினிமாவுக்கு பணம் சம்பாதிப்பதற்காக அல்லாமல், அது என்னவென்று பார்த்து விடுவோம், அதிலும் தன்னை நிரூபிக்க முடியும் என்று சவாலை கருத்தில் கொண்டு வந்தவர் அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது:
“நான் ஐந்து ஆண்டுகள் சிறிய படங்களில்தான் கவனம் செலுத்தினேன். வணிகப் படங்களுக்காக வந்த அழைப்புகளை நிராகரித்தேன். 1977-78-களில் சிறிய சினிமாக்களின் காலம் கொஞ்சம் கனிந்து வந்தது. பெரிய படங்களுக்கு அவர்களுக்கு ‘பெயர்’தான் தேவைப்பட்டது, நான் இரண்டு படங்களிலிருந்து எந்த வித அறிவிப்புமின்றி நீக்கப்பட்டேன். அப்போது முடிவு கட்டினேன், பணம் தேவையில்லை என்று. பெரிய அழைப்புகளைப் புறக்கணித்தேன். எனக்கான ஒரு பெயரை உருவாக்கிக் கொள்ள சிறிய படங்களையே, தரமான கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்தேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்தியா டுடே பத்திரிகைக்கு 1976-ல் அளித்த பேட்டியில், “வணிக சினிமா என்பது ஒரு பெரும் சுழல். அதில் சும்மா ஒரு கேளிக்கைக்காக ஒன்றிரண்டு நடிக்கலாம். ஆனால் ஷபனா ஆஸ்மி, இவ்வளவு மூழ்கிப் போக விரும்பினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், வணிகச் சுழலில் இருந்து அவரால் வெளியேற முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இப்போது அதில் வெகு தொலைவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று வணிக சினிமாவிற்குள் நுழைவது வெளியே வர முடியாத புதிர் பாதை என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக அறிவுப்பூர்வமாக விளங்கிக் கொண்டவர்தான் ஸ்மிதா பாட்டீல்.
“நான் நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். நல்ல இயக்குநர்கள் வருவது மிக மிகக் கடினமான ஒன்று. இரண்டாவது நல்ல இயக்குநர்கள் தங்கள் படங்களில் அதிகம் முகம் தெரியாதவர்களையே விரும்புவார்கள். எனவே, வணிக சினிமா வேண்டவே வேண்டாம் என்று ஆழமாக நம்பினேன். காரணம், அது ஸ்மிதா பாட்டீல் என்ற நடிகையின் முடிவு காலமாகவே இருக்கும் என்றே நினைத்தேன்” என்று நல்ல சினிமாக்கள் மீதான தன் மரியாதையை இப்படி வெளிப்படுத்தினார் ஸ்மிதா பாட்டீல்.
நமக் ஹலால், சக்தி போன்ற வணிக சினிமாக்களில் அவர் நடித்தது ஏதோ ஒன்றை நிரூபிக்கத்தான் என்று ஃபிலிம் ஃபேர் பேட்டியில் ஸ்மிதா பாட்டீலின் சகோதரி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு யாஷ் சோப்ராவின் ‘சில்சிலா’ படத்திற்கான வாய்ப்புக் கிடைத்தது. அதில் பின்னால் ஜெயாபச்சன் நடித்த ரோலுக்குத்தான் ஸ்மிதா பாட்டீல் ஒப்பந்திக்கப்பட்டார். ஆனால் திடீரென ஸ்மிதா பாட்டீல் நீக்கப்பட்டார். இதை யாஷ் சோப்ராவே பிற்பாடு தெரிவித்ததுதான். அதை தானே ஸ்மிதாவிடம் தெரிவிக்காமல் சசி கபூர் மூலம் தெரியப்படுத்தியது ஸ்மிதா பாட்டில் மனதைக் காயப்படுத்தியது. நேரடியாக தெரிவிக்க தர்மசங்கடமாக இருந்ததாக பிற்பாடு ஸ்மிதாவிடமே யாஷ் சோப்ரா தெரிவித்தார். அப்போது யாஷ்ஜி நீங்கள் செய்தது தவறு என்று அவரிடமே நேரடியாகத் தெரிவித்தார் ஸ்மிதா.
நமக்ஹலால் படத்தில் மழையில் அமிதாபுடன் ‘ஆஜ் ரபட் ஜாயே’ என்ற பப்பி லஹரி இசையிலான பாடலுக்கு ஆடும்போது அந்தக் காட்சியுடன் ஸ்மிதா பாட்டீலால் ஒட்ட முடியவில்லை என்பதை அமிதாப் பச்சன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சன் தன் வலைப்பக்கத்தில் இதை எழுதும்போது, ‘அந்தப் படத்தில் அவரைச் செய்யச் சொன்ன விஷயங்களை ஏன் அவர் செய்ய வேண்டும் என்பதே அவருக்குப் புரியாமல் இருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
பிற்பாடு ‘Smita Patil: A Brief Incandescence’ என்ற நூல் வெளியீட்டின் போது அமிதாப், அந்தப் பாட்டுக்கு நடனமாடுவது, தன் பண்பாடு மற்றும் சிந்தனைக்கு ஏற்றதல்ல என்று ஸ்மிதா நினைத்தார் என்று கூறியதும் ஸ்மிதா பாட்டீல் என்ற கேரக்டரை நமக்கு அறிவுறுத்துவதாகும். இந்தப் படத்தில் நடித்தது ஸ்மிதா பாட்டீலுக்கு பெரும் தர்மசங்கடமாகவே கடைசி வரை இருந்தது என்பதையும் அமிதாப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மட்டுமல்ல ரமேஷ் சிப்பியின் சக்தி என்ற படத்திலும் ஒரு வசனம் ஸ்மிதா பாட்டீலை நெருடச் செய்தது. “நான் உன் குழந்தைக்குத் தாயாகப் போகிறேன்” என்ற வசனத்தைச் சொல்ல அவரால் முடியவில்லை. “இது போன்ற முட்டாள்தனமான, கிளீஷே ரக வசனத்தை என்னால் சொல்ல முடியாது” என்று ஓய்வறைக்குத் திரும்பிய பிறகு கூறினாராம் ஸ்மிதா பாட்டீல். கடைசியில் ஏகப்பட்ட விவாதங்களுக்குப் பிறகு ‘நான் தாயாகப் போகிறேன்’ என்று சொல்ல வைக்க படாதபாடு பட வேண்டியதாயிற்றாம்.
ஆனால் பூமிகா, மந்தன் போன்ற தான் நடித்த பாரலல் சினிமா பெண் கதாபாத்திரங்களைப் பற்றி ஸ்மிதா ஒருமுறை கூறியபோது, “உண்மையான பெண்ணைக் காட்டினார்கள். அவர்களின் வாதை, துயரத்தை மட்டும் காட்டவில்லை, அவர்களின் அக பலத்தையும் காட்டினார்கள். ஆனால் மைய நீரோட்ட / வணிக / ஃபார்முலா சினிமாக்களில் பெண்கள் கதாபாத்திரம் எப்போதும் முட்டாள்தனமாகவே இருக்கும்” என்று வெளிப்படையாக விமர்சித்தார்.
இந்தியாவின் ஆகச் சிறந்த இந்தக் கலை வித்தகர் டிசம்பர் 13-ம் தேதி 1986-ம் ஆண்டு தன் 31-வது வயதில் பிரசவ சிக்கல்களினால் உயிரிழந்தார். இந்திய திரை உலகம் ஓர் அறிவுஜீவித / கலைநுட்பம் மிக்க நடிகையை இழந்தது.