

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வார் 2’ திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக மோசமனா தோல்விப் படமாக மாறியிருக்கிறது.
யஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான படம் ‘வார் 2’. இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் ஜூனியர் என்.டி.ஆர். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்ததால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் பார்வையாளர்கள் மத்தியில் இப்படம் எந்தவிதத்திலும் எடுபடவில்லை.
யஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் மாபெரும் தோல்விப்படமாக ‘வார் 2’ மாறியிருக்கிறது. மேலும், இப்படத்துக்கு அனைத்து மாநிலங்களிலும் ‘கூலி’ பெரும் போட்டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இப்படம் தெலுங்கில் பெரும் தோல்வியாக அமைந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருப்பதால் தெலுங்கில் பெரியளவில் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ‘ரபாசா’ என்ற படம் வெளியாகி பெரும் தோல்வியை தழுவியது. அதற்குப் பிறகு அவரது நடிப்பில் மாபெரும் தோல்விப் படம் என்றால் அது ‘வார் 2’ தான். இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் ஜூனியர் என்.டி.ஆர் பேசியதை வைத்து பலரும் தற்போது இணையத்தில் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘வார் 2’ படத்தின் தெலுங்கு உரிமையினை 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி வெளியிட்டார் நாக வம்சி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு குறைந்தது 60 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இப்படத்துக்கு முன்னதாக அவருடைய தயாரிப்பில் வெளியான ‘கிங்டம்’ படமும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.