மும்பை நிகழ்வில் இந்தியில் பேச மறுத்த கஜோல் - சலசலப்பும் பின்னணியும்

மும்பை நிகழ்வில் இந்தியில் பேச மறுத்த கஜோல் - சலசலப்பும் பின்னணியும்
Updated on
1 min read

மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கஜோல் இந்தியில் பேச மறுத்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட கஜோல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். மராத்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பேசிய அவரிடம் நிருபர் ஒருவர் இந்தியில் பேசுமாறு கூறினார். இதனால் கோபமடைந்த கஜோல், “நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரியும்” என்று கடுமையான தொனியில் கூறினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலானது. கஜோலுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பும் பதிவிட்டு வருகின்றனர். “இந்தி வேண்டாம் என்று நினைப்பவர் இத்தனை வருடங்கள் எதற்காக இந்தி படங்களில் நடித்தார்” என்று எக்ஸ் தள பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல “பேரும் புகழும் சம்பாதிக்கும் வரை இந்தி வேண்டும், இப்போது அது தேவைப்படவில்லையா?” என்று மற்றொரு பயனர் விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக மஹாராஷ்டிராவில் மராத்தி பேசுபவர்களுக்கும் இந்தி பேசும் மக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இந்தச் சூழலில் இந்தி மொழி குறித்த கஜோலின் இந்த கருத்து கவனிக்கத்தக்கது. தற்போது ’சார்ஜமீன்’ என்ற படத்தில் கஜோல் நடித்துள்ளார். இதில் அவருடன் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in