

பிரபல அமெரிக்க பாடகருடன் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தி படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனிடையே, அமெரிக்காவின் பிரபல பாடகரான நிக் ஜோனாஸ் (25) என்பவருடன் பிரியங்கா சோப்ரா நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜோடியாகவும் பங்கேற்று வந்தனர்.
இந்நிலையில், இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியங்கா சோப்ரா சில நாட்களுக்கு முன்பு நிக் ஜோனாஸுடன் மும்பை வந்து தனது தாயரை சந்தித்து ஆசிபெற்றதாக தெரிகிறது. எனினும், இதனை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் தரப்பும் உறுதி செய்யவில்லை.