“நான் ரஜினியின் மிகப் பெரிய ரசிகன்” - ஆமிர்கான்
“நான் ரஜினியின் மிகப் பெரிய ரசிகன்” என்று நடிகர் ஆமிர்கான் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான் நடித்துள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் ஆமிர்கான். இதற்காக அளித்த பேட்டியில் முதன்முறையாக ‘கூலி’ படம் குறித்து பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் ‘கூலி’ மற்றும் ரஜினிகாந்த் உடன் நடித்தது குறித்து ஆமிர்கான், “லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ படத்தை முடித்தவுடன், அவரது இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளேன். தற்போது அவர் இயக்கத்தில் ரஜினி சார் நடித்துள்ள ‘கூலி’ படத்திலும் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நான் ரஜினி சாரின் மிகப் பெரிய ரசிகன். அவர் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உண்டு. லோகேஷ் கனகராஜ் என்னிடம் ரஜினி சாருடைய படம் என்றவுடன், கதையே கேட்காமல் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். ‘கூலி’ படத்தில் எனது கதாபாத்திரம் சுவாரசியமாக இருக்கும். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார் ஆமிர்கான்.
