ஹொம்பாலே நிறுவனம் தயாரிப்பில் ஹ்ரித்திக் ரோஷன்!

ஹொம்பாலே நிறுவனம் தயாரிப்பில் ஹ்ரித்திக் ரோஷன்!
Updated on
1 min read

ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நாயகனாக ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளார்.

‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘சலார்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த நிறுவனம் ஹொம்பாலே பிலிம்ஸ். தற்போது ‘காந்தாரா 2’ படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் புதிய படத்தினை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் இயக்குநர் யார் என்பதை ஹொம்பாலே நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் படத்தினை தயாரிக்க இருப்பது குறித்து ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர், “எங்களின் இந்த கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில், நாங்கள் மொழி எல்லைகளைக் கடந்து மக்கள் விரும்பும் கதைகளைச் சொல்லும் நோக்குடன் பயணிக்கிறோம்.

ஹ்ரித்திக் ரோஷனுடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தக் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கியப் படியாகும். பிரம்மாண்டமான அளவில், மிக ஆழமும் கற்பனையும் ஒன்றிணைக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இது மக்கள் மனங்களில் சக்திவாய்ந்ததும், நிலைத்தும் இருக்கும் ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

ஹொம்பாலே நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவிருப்பது குறித்து ஹ்ரித்திக் ரோஷன், “ஹொம்பாலே பிலிம்ஸ் பல தனித்துவமான கதைகளின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து ஒரு வெகு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் திரைப்படத்தில் பணியாற்ற மிக ஆவலாக உள்ளேன். நாங்கள் பெரிய திரைக்கனவுகளைக் காண்கிறோம் மற்றும் அதை நனவாக்க உறுதியாக இருப்போம். ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in