பயோபிக் சர்ச்சை: ராஜமவுலிக்கு ‘நோ’ சொல்லும் பால்கே குடும்பம்!

பயோபிக் சர்ச்சை: ராஜமவுலிக்கு ‘நோ’ சொல்லும் பால்கே குடும்பம்!
Updated on
1 min read

பயோபிக் பட விவகாரத்தில், ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ள படத்துக்கு மட்டுமே ஆதரவு என்று தாதா சாகேப் பால்கேவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படுபவர், தாதா சாகேப் பால்கே. இந்தியாவின் முதல் திரைப்படமாகக் கருதப்படும் ‘ராஜா ஹரிச்சந்திரா’வை 1913-ம் ஆண்டு இயக்கியவர். இவர் வாழ்க்கைக் கதையைத் தழுவி, ‘மேட் இன் இண்டியா’ என்ற தலைப்பில் படம் உருவாக இருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, கடந்த 2023-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வருண் குப்தாவும் எஸ்.எஸ். கார்த்திகேயாவும் இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் தாதா சாகேப் பால்கேவாக ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஆமிர்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படமும் பால்கேவின் பயோபிக் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திரப் போராட்டப் பின்னணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. ஒரே நேரத்தில் பால்கே-வின் வாழ்க்கைக் கதையை 2 பேர் இயக்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தாதா சாகேப் பால்கேவின் கொள்ளுப் பேரனான சந்திரசேகர் ஸ்ரீகிருஷ்ணா புஷல்கர் அளித்த பேட்டி ஒன்றில், ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படத்துக்கு மட்டுமே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் மேலும் கூறும்போது, “ராஜமவுலி தரப்பில் இருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், அவரது திட்டம் குறித்து கேள்விப்பட்டேன். அதற்காக யாரும் என்னை ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை. பால்கேவைப் பற்றி படம் எடுக்கிறார்கள் என்றால் அவரது குடும்பத்தாரிடம் பேச வேண்டும். குடும்பத்தை புறக்கணித்து நடக்கக் கூடாது. அவர்களால் மட்டுமே உண்மையான கதையைச் சொல்ல முடியும்.

ஆமிர்கான் – ராஜ்குமார் ஹிரானி குழுவினர் தங்களுடைய படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளனர். இருவருடைய திட்டமும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் உதவி தயாரிப்பாளர் இந்துகுஷ் பரத்வாஜ் கடந்த 3 ஆண்டுகளாக என்னுடன் பேசி வருகிறார், சந்திப்பார், ஆராய்ச்சி செய்வார், விவரங்கள் கேட்பார். அவரிடம் “நீங்கள் நேர்மையாக வேலை செய்கிறீர்கள். எங்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை” என்று கூறினேன்.

ஆமிர்கான் ஒரு படத்துக்கு தீவிரமாக உழைப்பவர். அவர் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் என்ன வேலை செய்தாலும், அதில் ஒரு நேர்மை இருக்கும். அவரும் ராஜ்குமார் ஹிரானியும் இணைந்திருப்பது பால்கே அவர்களின் கதைக்கு மரியாதையை முன்வைக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியின் மூலம் ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ள படத்துக்கு தாதா சாகேப் பால்கே குடும்பத்தினர் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in