பஹல்காம் சம்பவ ஒப்பீடு: பாடகர் சோனு நிகம் மீது போலீஸில் கன்னட அமைப்பினர் புகார்

பஹல்காம் சம்பவ ஒப்பீடு: பாடகர் சோனு நிகம் மீது போலீஸில் கன்னட அமைப்பினர் புகார்
Updated on
1 min read

கன்னடம் பேசும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பிரபல பாடகர் சோனு நிகம் மீது கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள், காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில் பெங்களூருவில் பாடகர் சோனு நிகமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சோனு நிகம் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் கன்னடத்தில் ஒரு பாடல் பாடும்படி கேட்டார். அப்போது பாடுவதை நிறுத்திவிட்டு பேசிய சோனு நிகம், “என்னுடைய வாழ்க்கையில், நான் பல மொழிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறேன். ஆனால், நான் பாடிய சிறந்த பாடல்கள் கன்னட மொழியில்தான்.

நான், உங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம், நிறைய அன்பைக் கொண்டுவருகிறேன். நாங்கள் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கர்நாடகாவில் நாங்கள் நிகழ்ச்சியை நடத்தும்போதெல்லாம், உங்கள் மீது மிகுந்த மரியாதையுடன் வருகிறோம். நீங்கள் என்னை உங்கள் குடும்பத்தைப் போலவே நடத்தினீர்கள். ஆனால், என்னுடைய கரியர் அளவுக்கு வயது இல்லாத ஒரு பையன் கன்னடத்தில் பாடச் சொல்லி என்னை மிரட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை” என்றார்.

மேலும், ‘பஹல்காமில் நடந்த சம்பவத்துக்கு கூட இதுபோன்ற அணுகுமுறைதான் காரணம். தயவுசெய்து உங்கள் முன் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பல நிகழ்ச்சிகளை நான் நடத்துகிறேன். மேலும் ஒரு நபர் 'கன்னடம்' என்று கத்துவதை நான் கேட்கும்போதெல்லாம், அவர்களுக்காக கன்னடத்தில் குறைந்தது ஒரு வரியையாவது பாடுவேன். எனவே தயவுசெய்து கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

கன்னடத்தில் பாடச் சொல்லி கேட்டதை பஹல்காம் தாக்குதலுடன் ஒப்பிடுவதா என்று பலரும் சோனு நிகமுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக ரக்‌ஷன வேதிகே (கேஆர்வி) அமைப்பின் பெங்களூரு மாவட்டத் தலைவர் சோனு நிகம் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். கன்னடம் பேசும் மக்களுக்கு எதிராக அவர் பேசிய கருத்துகள் கர்நாடகாவில் உள்ள மொழியியல் சமூகங்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in