5 வருடமாக நடந்து வந்த கங்கனா ரனாவத் - ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கு முடித்து வைப்பு

5 வருடமாக நடந்து வந்த கங்கனா ரனாவத் - ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கு முடித்து வைப்பு

Published on

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்குப் பிறகு நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டை சரமாரியாக விளாசினார். அங்கு போதைப் பொருள் மற்றும் நெப்போடிசம் முக்கிய பிரச்சினையாக இருப்பதாகக் கூறியிருந்தார். இதற்கிடையே கங்கனாவும் நடிகர் ஹிர்த்திக் ரோஷனும் காதலித்து வந்ததாகவும் பின்பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

2016-ம்ஆண்டு இதுதொடர்பாக பல குற்றச்சாட்டுகளை கங்கனா வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மீது கங்கனா, சில அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார். ஹிர்த்திக் குடும்பத்துக்கு வேண்டியவரான அவர், தன்னை ஹிர்த்திக்கிடம் மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார் என்றும் கூறியிருந்தார்.

இதை எதிர்த்துமும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவேத் அக்தர் வழக்குத் தொடர்ந்தார். கங்கனாவும் ஜாவேத் அக்தர் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 5 வருடமாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை மத்தியஸ்தம் மூலம் பேசி முடித்துவிட்டதாக கங்கனா தெரிவித்துள்ளார். மத்தியஸ்தத்தின்போது, ஜாவேத் அக்தர் அன்பு மற்றும் கனிவுடன் நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ள கங்கனா, தனது அடுத்த படத்தில் பாடல்கள் எழுதவும் ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in