

பாலிவுட் படமான ‘தடக்’, மூன்றே நாட்களில் 34 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
ஷஷாங்க் இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘தடக்’. மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம் பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக் இது. சாதி மாறிக் காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
‘தடக்’ படத்தில் தான் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக இஷான் காட்டெர் நடித்துள்ளார். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 20) இந்தப் படம் உலகம் முழுவதும் ரிலீஸானது. முதல் நாளில் 8.71 கோடி ரூபாய், இரண்டாம் நாளில் 11.04 கோடி ரூபாய், மூன்றாம் நாளில் 13.92 கோடி ரூபாய் என மூன்றே நாட்களில் மொத்தம் 33.67 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மூன்றே நாட்களில் இவ்வளவு வசூலித்திருப்பதால், மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. தான் அறிமுகமான படம் வெற்றி பெற்றதால், அளவில்லா சந்தோஷத்தில் இருக்கிறார் ஜான்வி கபூர்.