மருத்துவமனையில் தன்னை சேர்த்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய சயீப் அலி கான்!

மருத்துவமனையில் தன்னை சேர்த்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய சயீப் அலி கான்!
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகர் சயீப் அலி கான் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி அதிகாலை, அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார். வீட்டில் பணியாற்றியவர்கள் சயீப் அலி கானை மீட்டு, ஆட்டோவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய முதுகில் சிக்கி இருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் 6 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

அதற்கு முன், தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணாவை, சயீப் அலி கான் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பஜன் சிங் ராணா கூறும் போது, “விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுக்கு நன்றி என்று தெரிவித்தார். நான் பணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு அவரிடம் எந்தக் கோரிக்கையும் இல்லை. அவர் எனக்குக் கொடுத்ததை வாங்கிக் கொண்டேன். அதில் மகிழ்ச்சி. இது பணம் பற்றிய பிரச்சினையில்லை" என்றார்.

அவருக்கு சயீப் அலி கான் ரூ.50 ஆயிரம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. நடிகர் சயீப் அலி கானை குத்திய பங்களாதேஷை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in