

மும்பை: இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட கிரண் ராவின் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆமீர்கான் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் இடம்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அதேநேரத்தில் இந்த பயணம் முழுவதிலும் எங்களுக்கு கிடைத்த ஆதரவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
ஆஸ்கர் விருது குழுவுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள சிறந்த படங்களுடன் எங்கள் படம் இடம்பெற்றதை பெருமையாக கருதுகிறோம். எங்கள் படத்துக்கு ஆதரவு அளித்த உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு அன்பும் நன்றியும். இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 படங்களும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று விருது பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களை பொறுத்தவரை இது முடிவல்ல. அடுத்த நகர்வை நோக்கிய தொடக்கம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
97-வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் கிரண் ராவ் இயக்கிய ‘லாபத்தா லேடீஸ்’ இந்தி திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அதிகாரபூர்வமாக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்ற 15 படங்களில் இப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.