“விமர்சிக்கட்டுமே...” - அமித் ஷாவை ‘ஹனுமன்’ என அழைத்த வருண் தவண் விளக்கம்
மும்பை: “விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நான் அரசியல்வாதி அல்ல. நான் வியந்து பார்க்கும் சிலரின் குணங்களை முன்னிலைப்படுத்தி பேசுகிறேன். அவ்வளவுதான்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாராட்டியது குறித்து நடிகர் வருண் தவண் தெரிவித்துள்ளார்.
வருண் தவண் நடித்துள்ள ‘பேபி ஜான்’ திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “எனக்கு அமித் ஷாவை பார்க்கும்போது, ‘ஹனுமன்’ போல தோன்றுகிறது. ஏனென்றால் நான் அண்மையில் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்நிகழ்வில் பேசிய அமித் ஷா எல்லா கேள்விகளுக்கும் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் முன்னிறுத்தி பேசினார்.
அமித் ஷா தன்னை எந்த இடத்திலும் முன்னிறுத்தி பேசவில்லை. அவரை பொறுத்தவரை இந்தியா தான் அவருக்கு எல்லாமே. அது தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது. அவர் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கிறாரே தவிர, பொதுவெளியில் தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்குவது குறித்தெல்லாம் அவர் யோசிப்பதில்லை. நாடு தான் முக்கியம் என அவர் குறிப்பிடுகிறார்” என பேசினார்.
அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. சிலர் ‘சங்கி’ என்றும் வருண் தவணை விமர்சித்தனர். இந்நிலையில், இந்த விமர்சனங்கள் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த வருண், “விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நான் அரசியல்வாதி அல்ல. எனக்கு பிடிக்காததை சொல்லும்போது அதற்கு எதிராக நான் குரல் கொடுப்பேன். நான் வியந்து பார்க்கும் சிலரின் குணங்களை முன்னிலைப்படுத்தி பேசுகிறேன். அவ்வளவு தான்” என தெரிவித்துள்ளார்.
