

நடிகர் சோனு சூட், தாய்லாந்து சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ விளம்பர தூதராகவும் கவுரவ ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சோனு சூட் தமிழில் கள்ளழகர், ஒஸ்தி, அருந்ததி, தமிழரசன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ள சோனு சூட், கரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இப்போதும் தேவைப்படுவோருக்குத் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் தாய்லாந்து சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ விளம்பர தூதராகவும் கவுரவ ஆலோசகராகவும் சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தாய்லாந்து சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அவர் மேற்கொள்வார். இதற்காக, தாய்லாந்து அரசுக்கு சோனு சூட் நன்றி தெரிவித்துள்ளார்.