

மும்பை: நடிகர் ஷாருக்கான் தனது 59வது பிறந்தநாளை நேற்று (நவ.02) கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவர் தனது ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இதற்காக அவரது வீட்டின் முன்புறம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.
அந்த வகையில் மும்பையில் நேற்று ஷாருக்கானின் ரசிகர் மன்றங்கள் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ரசிகர்களின் முன்னிலையில் பேசும்போது, “உங்களிடம் ஒரு நல்ல விஷயத்தை கூறுகிறேன். நான் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு மூச்சு பிரச்சினை ஏற்படாது என்று நினைத்தேன். ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. இறைவன் நாடினால் விரைவில் அதுவும் சரியாகி விடும்” என்று ஷாருக் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அடுத்த பட அப்டேட்டை விட இதுதான் சிறந்த அறிவிப்பு என்று ரசிகர் ஒருவர் அந்த வீடியோவில் கமென்ட் செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பேட்டி ஒன்றில் பேசிய ஷாருக்கான், தான் ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பதாக கூறியிருந்தார். தான் நாள் முழுக்க சாப்பிடுவதில்லை என்றும், வெறும் பிளாக் காபியை மட்டுமே குடித்து தான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டதாக அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.