

கோவா: 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவுக்கான தொடக்கப் படமாக ‘ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்’ படம் தேர்வாகியுள்ளது.
கோவாவின் பனாஜி நகரில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் 25 முழு நீள திரைப்படங்களும், 20 நான் ஃபீச்சர் திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. முழு நீள (feature flim) திரைப்பட பிரிவில் சாவர்க்கரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான ‘ஸ்வதந்திரிய சாவர்க்கர்’ திரைப்படம் முதல் படமாக திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தை ரன்தீப் ஹுடா இயக்கி நடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் பிரிவில் தமிழில், கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, மலையாளத்தில் வெளியான பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’, இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 370’, ‘ஸ்ரீகாந்த்’, மலையாள படங்களான ‘பிரம்மயுகம்’, ‘லெவல் க்ராஸ்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. இவை தவிர்த்து, வெகுஜன திரைபடங்களுக்கான பிரிவில் ‘12த் ஃபெயில்’, ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. நான் ஃபீச்சர் பிரிவில் தமிழிலிருந்து ‘அம்மாவின் பெருமை’, ‘சிவந்த மண்’ ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.