

மும்பை: இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. “பொழுது போக்கு நிகழ்ச்சிக்காக விலங்குகளை பயன்படுத்த வேண்டாம்” எனவும் எச்சரித்துள்ளது.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் சல்மான்கான். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தி பிக்பாக்ஸின் 18-வது சீசன் தொடங்கியது. தொலைக்காட்சி நடிகர்கள், சமூகவலைதள பிரபலங்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். இதில் ‘காதராஜ்’ என பெயரிடப்பட்டுள்ள கழுதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. கார்டன் ஏரியாவில் உள்ள கழுதையை குடும்பத்தினர் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சல்மான்கானுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், “பிக்பாஸ் வீட்டில் கழுதையை வைத்திருப்பதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு புகார்கள் வந்தன. உடனடியாக அந்த கழுதையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கழுதையை பயன்படுத்துவது ஒன்றும் நகைப்புக்குரிய விஷயமல்ல.
இயற்கையாகவே கழுதைகள் அதிகம் பதற்றப்படும் குணமுடையவை. அதிலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வரும் சத்தம், லைட்டிங், இவையெல்லாம் சேர்த்து இன்னும் அதை பயமுறுத்தும். அதுவும் குறிப்பாக சிறிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள கழுதை குறித்து பொதுமக்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கடிதம் சல்மான் கான் தவிர்த்து, புரொடக்ஷன் ஹவுஸ் மற்றும் வியாகாம் 18 நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.